Saturday, August 16, 2008

தமிழகம்: குசேலன் முதல் வார வசூல் ரூ.21 கோடி! உலகமெங்கும் ரூ.43 கோடி!!


சூரியன் ஒருபோதும் தன்னை உச்ச நட்சத்திரம் என்று அறிவித்துக் கொள்வதில்லை. யார் ஒப்புக் கொண் டாலும் மறுத்தாலும் சூரியன்தான் சூப்பர்ஸ்டார்.

அது போலத்தான் தமிழ்த் திரையுலகில் ரஜினியும்.

திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சிவாஜி வெள்ளி விழாவில் சூப்பர் ஸ்டாரைப் பற்றிக் கூறிய வார்த்தைகள்:

‘இந்த உலகின் உச்ச நட்சத்திரம் சூரியன். திரையுலகின் உச்ச நட்சத்திரம் அதாவது சூரியன், தம்பி ரஜினிகாந்த் அவர்கள்தான். எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும், ஒரு சூரியனுக்கு மட்டும்தான் உச்ச நட்சத்திரம் என்ற பெருமை உண்டு...’
நண்பர்கள் யாரும் இதை மறந்திருக்க மாட்டீர்கள்...

எனவே ரஜினிக்கு குசேலனால் இழுக்கு நேர்ந்துவிட்டது... அல்லது படத்தின் கடைசிக் காட்சியில் பசுபதிக்கு ரஜினி கொடுக்கும் அறையை, வாசுவுக்குக் கொடுத்திருக்க வேண்டும் (இப்படி ஒரு படம் எடுத்ததற்காகவாம்!) என்றெல்லாம் நாமே கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.

சூரியன் மீது எவ்வளவு அழுக்குகளைக் கொட்ட முயற்சித்தாலும் அந்த அழுக்கோடு சேர்த்து கொட்டியவர்களும் எரிந்து போவார்கள்.

காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!

நண்பர்களே... காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்... இனி எவருக்கும் நீங்கள் பதில் சொல்ல சின்ன தயக்கம் கூடக் காட்டத் தேவையில்லை.
சூப்பர் ஸ்டார் மீண்டும் ஒருமுறை புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்க நல்ல தருணம் கூடி வருகிறது..
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... படத்தை வாங்கி உலகமெங்கும் விநியோகித்த பிரமிட் சாய்மிராவே பொய் சொன்னால் கூட (குசேலனால் சாய்மிராவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை), பாக்ஸ் ஆபீஸ் எனப்படும் முதல் வார இறுதி வசூல் நிலவரப்படி குசேலன் படம் வசூலித்துக் கொடுத்துள்ள தொகை உலகமெங்கும் ரூ.45 கோடி!
இதற்கான முழு புள்ளி விவரத்தையும் உங்களுக்கு கட்டாயம் இன்னொரு பதிவில் தருகிறேன்.

சூப்பர் ஸ்டார் ‘ச்சும்மா’ கெஸ்ட் ரோலில் வந்த ஒரு படத்தின் ஒரு வார கலெக்ஷன் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.21 கோடி. இதையும் நாமாகச் சொல்லவில்லை, பிரமிட் சாய்மிரா நிறுவன தலைவர் பி.எஸ்.சாமிநாதன், தி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் (உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது சாமிநாதன் சார்!).

ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்த ஒரு நண்பர் அவர். பாக்ஸ் ஆபீஸ் புலி. இதற்காக பத்திரிகையே நடத்துகிறார்.

அவர் சொன்ன புள்ளி விவரப்படி, குசேலன் திரைப்படம் 7 நாட்களில் அவர் கணக்கெடுத்த 80 திரையரங்குகளில் (சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற பெரிய நகரங்கள் தவிர்த்து) மட்டும் வசூல் எவ்வளவு தெரியுமா... ரூ. 8.40 கோடி (இது அரசுக்குக் காட்டப்பட்ட கணக்கு!) குசேலன் ரிலீசான மொத்த திரையரங்குகளின் வசூல் இல்லம்மா இது... வெறும் 80 தியேட்டர்களின் வசூல்...!

இதுக்குமேல கலெக்ஷன் பண்ணக்கூடிய ஒரு படத்தை யாராலாவது காட்ட முடியுமா... அல்லது இப்படி மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகரைத்தான் காட்ட முடியுமா?
வேதாரண்யத்தில் ப்ரியா என்ற திரையரங்கில் 3 லட்சம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள் படத்தை. முதல்வார முடிவில் இந்தப் படம் வசூலித்த தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரம். இன்னும் 75 ஆயிரம் வசூலித்தால் படம் சமநிலைக்கு வந்துவிடும்.

நண்பர்களே... நான் குறிப்பிடுவது நகரம் சார்ந்த திரையரங்கு கிடையாது.
சென்னை எல்லையைத் தாண்டி உள்ள தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் ரஜினி படத்துக்கு ‘பிளாட் ரேட்’ டிக்கெட்தான். ரூ. 50, 100 என்றுதான் கவுண்டரிலேயே வசூலிப்பார்கள். உபரி இருக்கைகள் வேறு. இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள், அந்த திரையரங்கு இன்று லாபம் சம்பாதித்திருக்குமா இல்லையா என்று!

காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் முதல் இரு வாரங்களுக்குப் பிறகு, இப்போது குசேலன் கட்டணம் ரூ.10, 30, 50 என போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால்... இதற்கு முன் ரூ.50,.100 என்று டிக்கெட் விற்றதாகத்தானே அர்த்தம்!

சென்னை தவிர, தமிழகத்தின் எல்லா நகரப் பகுதிகளிலுமே இப்படிப்பட்ட போஸ்டர்களை இப்போது பார்க்க முடிவதாக நமது நண்பர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் சூழலை மனதில் கொண்டு குசேலன் வசூல் எவ்வளவு இருக்கும் என இப்போது கணக்கிட்டுப் பாருங்கள்... வாங்கிய அனைவரையும் குபேரனாக்காவிட்டாலும், குசேலானாகாமல் காப்பாற்றியிருக்கிறார் ரஜினி என்ற உண்மை புரியும்.
நிற்க...
மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் குசேலன் கலக்கிக் கொண்டிருப்பதை அடுத்த பதிவில் பார்க்க..!

- எஸ்.எஸ்.

4 comments:

கிரி said...

விரிவான தகவல் நன்றி.

இந்த தகவல் அனைத்தும் நம்மை போன்ற ரசிகர்களை மட்டுமே வந்தடைகிறது, பொது மக்களுக்கு தெரிந்தால் மட்டுமே இவ்வாறு நீங்கள் திரட்டி தரும் தகவல்களுக்கு பலன் உண்டு. அந்த வகையில் எனக்கு வருத்தமே. நீங்கள் சிரமப்பட்டு திரட்டி தரும் தகவல்கள் யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களை சென்றடைவதில்லை என்பது கசப்பான உண்மை.

ஊடகங்கள் இந்த தகவல்களை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

நீங்கள் சுந்தர் போன்றவர்கள் கூறுவதால் மட்டுமே எங்களுக்கே தெரிகிறது. இல்லை என்றால் யார் கூறுவதை நம்புவது. சாதாரண ரசிகர்களான எங்களுக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களை என்னவென்று கூறுவது.

அவர்களுக்கு 1000 பிரச்சனை அதில் இவர்கள் இதை தெரிந்து கொள்வதில் எல்லாம் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

வேறு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

நீங்கள் தரும் தகவல்களுக்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் கூறும் தகவல்கள் விரைவில் தவிர்க்க முடியாமல் ஊடகங்களில் வந்தே ஆக வேண்டும் என்பதே என் எண்ணம். நல்லதையே நினைப்போம்.

அன்புடன்
கிரி

Anonymous said...

அப்போ இதற்க்குப்பேர் என்ன?

விழுந்தும் மீசையில் மண் படவில்லை. உங்களைப்போல் முட்டாள்கள் இருக்கும் வரை ரஜனி என்ற கன்னடனை வாழவைப்பீர்கள்

குசேலன் படம் தமிழ்நாட்டில் சரியாகப் போகவில்லை என்றும், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ.10 கோடியைத் திருப்பித் தருவதாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

குசேலன் திரைப்படத்தை ரஜினியின் குருநாதர் பாலச்சந்தரும், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமாரும் தமிழில் தயாரித்திருந்தனர். இதன் தெலுங்குப் பதிப்பை விஜயகுமாரும் அஸ்வினி தத்தும் தயாரித்தார்கள்.

தமிழில் நடித்ததற்காக பாலச்சந்தரிடம் சம்பளம் வாங்கிக் கொள்ளாத ரஜினிகாந்த், தெலுங்குப் பதிப்புக்கு மட்டும் சம்பளம் பெற்றுக் கொண்டார். தமிழில் அந்தப் பணம் முழுமையாக பாலச்சந்தருக்கே சேரட்டும் என்றும் பெரிய அளவில் லாபம் வரும்பட்சத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டாராம்.

படத்தை ரூ.65 கோடிக்கு பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. வழக்கமான ரஜினி படமாக குசேலன் இல்லாததால், நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை குசேலனால்.

ஒகேனக்கல் விவகாரத்தில் தன்னுடைய பேச்சுக்கு கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த பிரச்சினையும் பூதாகரமாகி படத்தின் வசூலைப் பாதித்தது.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் பிரமிட் சாய்மிரா நிறுவனத்திடம், தங்கள் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் திரும்பிய ரஜினி படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், ரூ.10 கோடியை திருப்பித் தருவதாக பிரமிட் சாய்மிராவுக்கு குசேலன் தயாரிப்பாளர்கள் சார்பில் ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சாய்மிரா நிறுவனத் தலைவர் சாமிநாதன் அளித்துள்ள பேட்டியில், குசேலன் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.21 கோடி வசூலித்துள்ளதாகவும், வரும் நாட்களில் போட்ட பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார். விரைவில் குசேலன் வசூல் குறித்து முழு விபரங்களையும் வெளியிடவிருப்பதாகவும் பிரமிட் சாய்மிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாபா பாணியில்...

ஏற்கெனவே பாபா திரைப்படத்துக்கு வசூல் பாதித்தபோது, படத்தின் தயாரிப்பாளரான ரஜினி விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும், மறைந்த ஜீவி முன்னிலையில் நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில் பணத்தை திருப்பித் தந்தது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன் இயக்குநர் மணிரத்னமும், தனது இருவர் பட நஷ்டத்தை இதே பாணியில்தான் ஈடுகட்டினார்.

Vaanathin Keezhe... said...

கருத்துக்கு நன்றி...

திரும்பத் திரும்ப பகுத்தறிவு இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் ஒரு கும்பலின் பிரச்சாரத்தில் மயங்கி நீங்களும் ஏன் இந்த தமிழ் - தமிழரல்லாதோர் துவேஷத்துக்கு மயங்கிப் போகிறீர்கள்...

அமெரிக்காவிலும், இதர உலக நாடுகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த நிலைகளில் ஓகோவென்று வாழ்கிறார்கள்...!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குஜராத்திக்கார பாபி ஜிந்தால் அமெரிக்க ஜனாதிபதியாக முயற்சித்தால் பெருமைப்படும் உங்களால், இந்தியாவில் பிறந்து , பக்கத்து மாநிலத்தில் வளர்ந்து, நம்மில் ஒருவராக வசிக்கும் ஒரு - அரசியல்வாதிகூட இல்லை - உன்னதமான கலைஞனை வேறுபடுத்தி, இழிவாகப் பேச எப்படி மனசு வருகிறது...?

இந்த ப்ளாக்கை எழுதும் நான் பாமரத்தனமான ரஜினி வெறியன் என நினைக்கவேண்டாம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்ற ஒரு தமிழன்தான் நான். ஆனால் மெத்தப் படித்துவிட்டதால் குறுந்தாடி வைத்துக்கொண்டு ஜோல்னா பையுடன் அலைகிற ரகமில்லை.

நல்ல கலைஞனை யாரும் கொண்டாடி மகிழலாம். நடிகர் சந்திரபாபு தன் மடியில் வந்து அமர்ந்தபோது அதை சந்தோஷத்தோடு கைதட்டி ரசித்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்ந்த நாடு இது. கலைகளை ஆராதிக்க எதுவும் தடையில்லை என்பதற்காக
இதைச் சொல்கிறேன்.

வேண்டாம், இனி ரஜினியை கன்னடன் என்று இழித்துப் பேசுவதை தயவுசெய்து விட்டுவிடுங்கள்... பிரிவினை பேசி நாம்தான் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியையே சற்று கவனமாகப் படியுங்கள்...

பாலச்சந்தருக்கு உதவ நினைத்து அவரிடம் பைசா வாங்காமல் நடித்திருக்கிறார் ரஜினி.

முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.21 கோடி வசூல். அடுத்த சில வாரங்கள் வரை படத்தை ஓடவிட வேண்டுமல்லவா... தியேட்டருக்கு மக்களை வரவிடாமல் செய்யும் வேலையில் தீவிரமாகக் குதித்துவிட்டன பத்திரிகைகள்.

குசேலனில் சில குறைகள் இருக்கலாம்... ஆனால் ஒரு க்ளீன் எண்டர்டெயின்மெண்ட் அந்தப் படம். அதை ஓடவிடாமல் செய்து, நல்ல சினிமாக்களை அவமானப்படுத் துகிறார்கள் சிலர். தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும்தான் இந்நிலை. கேரளா, வடமாநிலங்களில் நன்றாகப் போகிறது படம்.

இண்டர் நெட், பிளாக் எழுதுதல், வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் யார் தயவுமின்றி சம்பாதனை என உங்களின் உலகம் எவ்வளவோ பரந்து விரிந்து கிடந்தாலும், உங்களைப் போன்ற நண்பர்கள் இன்னும் எவ்வளவு மூடத்தனமாக இருக்கிறீர்கள் பாருங்கள்...

இதே பிற்போக்குத்தனத்தை எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும் தீவிரமாகக் கடைப் பிடித்தால்...
யாராலும் தாங்க முடியாது.

குசேலனில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் ரஜினி. இன்னும் பல நல்ல திட்டங்களை தமிழகத்துக்குச் செய்யும் எண்ணத்தில் உள்ளார்.

நல்ல மனிதர்களைக் காயப்படுத்தாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். வாழு... வாழவிடு.
நன்றி!

Vaanathin Keezhe... said...

திரு. கிரி...

மிக்க நன்றி. தங்கள் வலைப்பூ பார்த்தேன், அருமை.
ஞானியைப் போன்ற சிலரது வக்கிர குணங்கள்தான், ரஜினி போன்ற மனிதரின் உன்னதத்தை மற்றவர் புரிந்து கொள்ள உதவுகிறது!