Thursday, August 7, 2008

வருத்தம்தான் தெரிவித்தேன், மன்னிப்பல்ல! – ரஜினி


நான் கன்னட மக்களிடமோ, கன்னட அமைப்புகளிடமோ மன்னிப்புக் கேட்கவில்லை. வருத்தம்தான் தெரிவித்தேன், என்று ரஜின்காந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் குசேலன் திரைப்படத்தில் திரைக்குப் பின்னால் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் தனது சம்பளத்திலிருந்து ரூ.20 லட்சமும் தயாரிப்பாளர்-இயக்குநர் சார்பில் ரூ.20 லட்சமும் சேர்த்து ரூ.40 லட்சம் வரை உதவித் தொகையை இன்று வழங்கினார் ரஜினி.

இதற்காக சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் எளிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உதவித் தொகையை வழங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது:

இந்தப் படம் வெளியாவதற்கு முன் நடந்த பல சம்பவங்கள் என்னை நிறையவே யோசிக்க வைத்திருக்கின்றன.

குசேலன் படம் வெளியாவதற்காக நான் மன்னிப்புக் கேட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். நான் பேசியது தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. பல பத்திரிகைகளில் வெளியாகியும் உள்ளது.

நான் கன்னட மக்களிடமோ, அங்குள்ள கன்னட அமைப்புகளிடமோ மன்னிப்புக் கேட்கவில்லை.

ஒகேனக்கல் குடிநீருக்காக உண்ணாவிரதமிருந்த மேடையில் நான் பேசும்போது, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பேசியிருக்க வேண்டும்.

'இந்த குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் உதைக்க வேண்டாமா?' என்று கூறியிருக்க வேண்டும்.

இதைத்தான் இப்போது தெளிவுபடுத்திக் கூறி, கர்நாடகாவில் குசேலன் வெளியாக ஒத்துழையுங்கள் கேட்டுக் கொண்டேன்.

நான் கூறியதை கன்னட மக்கள் அனைவரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் வருத்தம் தெரிவித்தேன். இது எனக்கு ஒரு பாடம். இனி எந்த நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன்.

உதவி செய்வதில் ஆனந்தம்:

உதவி செய்யும்போது எப்போதுமே ஆனந்தமாக இருக்கிறது. அதனால்தான் இனி குசேலன் படத்திலிருந்து, நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் கலைஞர்களுக்காக எனது சம்பளத்திலிருந்து ஒரு தொகையை உதவியாக வழங்க முடிவு செய்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் எனது சம்பளத்திலிருந்து ரூ.20 லட்சமும், இயக்குநர் வாசு சார்பில் ரூ.5 லட்சமும், தயாரிப்பாளர்கள் சார்பில் ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

என் அடுத்த படமான சுல்தானில் பணியாற்றும் கலைஞர்களுக்கும் இதுபோன்ற உதவிகள் தொடரும். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் - இயக்குநர் என்ற முறையில் சவுந்தர்யாவும் ஒரு பெரிய தொகையை இதற்காக ஒதுக்க முன் வந்துள்ளார்.

இதேபோல எனது அடுத்த படம் ரோபோவிலும் உதவித் தொகை வழங்க இயக்குநர் ஷங்கரிடம் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார் ரஜினி.

கே.பாலச்சந்தர்

இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:
ரஜினி குசேலனுக்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படிப்பட்ட குணம் கொண்டவரல்ல அவர்.

தயாரிப்பாளரகள், விநியோகஸ்தர்கள், தனது ரசிகர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என யாருமே இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற பெருந்தன்மையில் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அதை இங்கே சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்வது வேதனையாக உள்ளது. இவ்விஷயத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் போன்றோர் விஷயத்தைப் புரிந்து கொண்டு பேசியிருப்பது பாராட்டத்தக்கது, என்றார்.

No comments: