Saturday, August 23, 2008

இத்தோடு ஓயுமா... இன்னும் தொடருமா?


குசேலன் தொடர்பாக இன்னுமொரு செய்தி போட வேண்டாம் என நினைத்தாலும், நடக்கிற அநியாயங்களைப் பார்க்கிறபோது, அதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்வது நமது கடமை.

குசேலனை தோல்விப் படம்... நஷ்டம் கொடுத்த படம் என்று முத்திரை குத்தி வெளியேற்றவே திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் விரும்புவது நன்கு தெரிகிறது.

ரஜினி என்ற தங்கச் சுரங்கத்திலிருந்து ஒவ்வொன்றாக வந்து விழும் பொன் மூட்டைகளுக்காக காத்திருக்கக் கூட இனி இவர்களுக்குப் பொறுமையில்லை போலும். மொத்தமாக அந்த தங்கச் சுரங்கத்தையே கொள்ளையடித்து விட்டால் என்ன என்ற இவர்களின் கொடூரச் சிந்தனையின் விளைவுதான் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை.

இனி ரசிகர் கூட்டம் வந்தாலும், குசேலனைப் பார்க்கவிடாமல் துரத்தி விடுவார்கள் போலிருக்கிறது, தங்களது பொய்களை நிஜமாக்கிக் காட்ட!

இல்லாவிட்டால் வெளியாகி வெறும் 20 நாட்களேயான ஒரு படத்தைத் தோல்விப் படம், நஷ்ட ஈடு கொடுங்கள் என்று கூறிக்கொண்டு வந்து நிற்பார்களா...

இவர்களின் நச்சரிப்பு தாங்காமல் இப்போது பிரமிட் சாய்மீரா நிறுவனம் சரோஜா திரைப்படத்தை நஷ்ட ஈடாகத் தருகிறது என தட்ஸ்தமிழ், சிஃபி மற்றும் பல இணைய தளங்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிடுகின்றன. நாம் கேள்விப்பட் வரை இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

சனிக்கிழமை (23.08.08) காலை 200 தியேட்டர்களின் உரிமையாளர்கள் சென்னையில் கூடி ரஜினி, பாலச்சந்தர், சாய்மிரா, ஐங்கரன் நிறுவனங்களுக்கு எதிராக முடிவெடுக்கப் போவதாக மிரட்டிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது சூப்பர்ஸ்டார் ரஜினியிடமிருந்து வரப்போகும் அடுத்த அறிவிப்பை. குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வருமா என காத்திருக்கிறார்கள்.

இந்த சிறுமை கண்ட பின்னும் ரஜினி அமைதி காப்பது ஏன்?

அடுத்த பதிவில் இருக்கிறது... இக்கேள்விக்கு விளக்கம்!

அதற்கு முன் தட்ஸ்தமிழ் செய்தியின் ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்...

...இப்போது குசேலன் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளும் (எல்லாருமே நஷ்ட ஜோதியில் தங்களையும் சேர்த்துக் கொண்டார்கள்... அகப்பட்ட வரை லாபம்தானே..!) ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் சரோஜாவைத் தருகிறார்கள் பிரமிட் சாய்மிரா.

ஆக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு பிரமிட் சாய்மிரா லாபம் பார்த்திருக்கிறது குசேலனில் என எடுத்துக் கொள்ளலாமா...

‘லாபம் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் சாய்மிராவுக்கு குசேலனால் நஷ்டமில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர்கள் இந்த அளவு இறங்கி வந்திருக்கிறார்கள். ஆனாலும் இது ஆரோக்கியப் போக்கல்ல... இனி, ஒரு படம் முதல் இரு வாரங்களுக்குள் லாபம் சம்பாதிக்காவிட்டால் தோல்விப் படம் என முத்திரை குத்தி விடுவார்களா தியேட்டர்காரர்கள்...

இந்தப் போக்குத் தொடர்ந்தால் சினிமா என்ற தொழில் இருக்காது. அந்தப் பெயரில் சூதாட்டம் நடக்கவே உதவும். இதே தியேட்டர்காரர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் கோடிகளைக் குவித்தவர்கள்தானே... இன்னும் ஒரு மாதம் கூட பொறுத்திருக்க முடியாதா இவர்களால்..., என்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர் கோபத்துடன்.

இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட செய்கைகளால் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் பண்ணாமல் ஒதுங்கிப் போகும் சூழலும் உருவாகிவிடும். அது சினிமாவுக்குத்தானே இழப்பு என்கிறார் அவர்.

நியாயம்தானே!

No comments: