Thursday, August 7, 2008

இதற்குப் பெயர்தான் நன்றிகெட்டத்தனம்! – அமீர், சீமான்



ரஜினி பேச்சுக்கு அமீர், சீமான் ஆதரவு

கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் லைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர்.

வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர்.

கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் ரஜினியின் நலம் விரும்பிகள் சிலர் கேட்டுக் கொண்டதால், தொலைக்காட்சியில் தோன்றி, தனது பேச்சுக்கு விளக்கம் தெரிவித்தார் ரஜினி.

அதில், ஒட்டு மொத்த கன்னடர்களையும் தான் தாக்கிப் பேசவில்லை என்றும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குவோரையும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரையும் உதைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியதை தவறாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு தனக்கு மிகப்பெரிய பாடம் என்றும், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், குசேலன் திரைப்படம் எவ்விதப் பிரச்சினையுமின்றி வெளியாக ஒத்துழையுங்கள் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

ஆனால், ரஜினி கன்னட மக்களிடமும், கன்னட மொழி வெறி அமைப்புகளிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தமிழ் நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார், ஏற்கெனவே ரஜியை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு, இளம் இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரஜினி உயர்ந்த மனிதர் -பாரதிராஜா

ரஜினிக்கும் எனக்கும் கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதன், மனிதாபிமானத்தில் முதலிடத்தில் நிற்பவர் என்பதில் எந்த மாறுபாடும் கிடையாது.
இப்போது அவர் கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்துப் பேசியதை அவருடைய மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன்.

சினிமாவின் நன்மைக்காகப் பேசிய ரஜினியைக் குறை கூறுவதோ கண்டித்துப் பேசுவதோ தேவையற்றது. அதற்கான தகுதியும் இங்கு யாருக்கும் கிடையாது.

நண்பர் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் மன்னிப்புக் கேட்கக்கூடியவர் அல்ல. எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் மனிதரும் அல்ல. இதை நான் அவருடன் பழகியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.

வருத்தம் தெரிவிப்பது மனித நேயத்தின் மிக உயர்ந்த பண்பு. நிஜத்திலும் நான் பார்த்த மிக உயரிய மனிதர்களுள் முதலிடத்தில் நிற்பவர் ரஜினி. அடித்த கரங்களுக்கே பூமாலை போடும் அளப்பரிய குணம் அவருக்கு மட்டுமே உண்டு.

எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை வெற்றிகரமாக சந்தித்து வெளியில் வந்த வீரன் இந்த மனிதன். இந்தச் சூழ்நிலையையும் நேர்கொள்ளக்கூடிய சக்தி அவரிடம் உண்டு.
இதே ரஜினி உண்ணாவிரதத்தில் பேசிய அடுத்த நாளே அவரது கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. அப்போது மருந்துக்குக் கூட ஆதரித்துப் பேச ஒருவரும் முன்வரவில்லையே.

சூப்பர்ஸ்டார் என்ற அவரது இமேஜூம், அவரது அதிகபட்ச சம்பளமும்தான் இங்குள்ள சிலருக்குப் பிரச்சினை என்றால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அது 30 வருடங்கள் அவர் கஷ்டப்பட்டதன் விளைவு. மக்கள் கொடுத்தது. புரிந்து கொண்டு பேசுங்கள், என்று கூறியுள்ளார்.

சீமான்:

இப்ப அவர் என்ன சொல்லிட்டார்னு இவங்கல்லாம் குதிக்கிறாங்க... இந்த விளக்கத்தைக் கூட அவர் சொல்லாம விட்டிருக்கலாம். அதனால அவருக்கொண்ணும் நஷ்டமில்லை. ஆனா, இதனால ஒரு வன்முறை வெடிச்சி தியேட்டர்காரங்களும், அப்பாவி ரசிகர்களும், படத்தை விநியோகம் பண்ணியவர்களும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே வருத்தம் தெரிவிச்சார்.

வருத்தம் தெரிவிக்கிறதுக்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களா நாம். ரஜினி ஒரு அரசியல்வாதியல்ல. அவரும் மனிதர்தானே... இங்கே தமிழ்நாட்டில் தமிழர்களோடு வசிக்கிற ஒரு தமிழ் நடிகரை எதற்காக இப்படி அவமானப்படுத்த வேண்டும்.

குசேலன் திரைப்படத்துக்கு வந்த பிரச்சனையை தமிழினினத்துக்கே வந்த சோதனையாகத்தான் நான் பார்க்கிறேன். அதை நாமெல்லோரும் முன்வந்து தீர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் ரஜினி, தனி மனிதராகவே நின்று அதைத் தீர்த்த விதத்தைப் பாராட்டுகிறேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.
யாரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்குப் பெயர் பகுத்தறிவுமல்ல, என்றார்.

அமீர்:

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மற்றொரு முன்னணி இயக்குநர் அமீர். அவர் கூறியிருப்பதாவது;
எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்து, கண்மூடித்தனமாகப் பேசுவதில் நம்மவர்களுக்கு இணையே இல்லை.

ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார், தமிழர்கள் பணமெல்லாம் அவருக்குப் போகிறது என்று புலம்புகிறார்கள் சிலர். ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்றால், அதைக் கொடுக்கும் அளவுக்கு அவர் மூலம் தமிழர்களாகிய நாம் சம்பாதிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காகவே சொந்தப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டவர் ரஜினி.

அவரைச் சுற்றியுள்ள தமிழர்கள்தானே அவரை வைத்துச் சம்பாதிக்கிறார்கள். ஒரு ரஜினி படம் வருகிறதென்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் புதுவாழ்வு கிடைக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒருவர், தன் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களுக்காகப் பேசியதை மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று கூறி, அதில் பப்ளிசிட்டி தேடுவது வெட்கக்கேடானது, என்று கூறியுள்ளார்.

ரஜினி இந்த மண்ணின் மைந்தர்! – பி. வாசு

இயக்குநர் பி.வாசு கூறியிருப்பதாவது:
நான் பல வருடங்கள் ரஜினியுடன் நெருங்கிப் பழகியவன். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரு அவமானமென்றால் முதலில் நின்று குரல் கொடுக்கக் கூடிய மனம் படைத்தவர் ரஜினி. எண்ணத்தால் முழுக்க முழுக்க தமிழராகவே வாழும் அவரைப் பார்த்து எழுப்பப்படும் எந்தக் கத்தல்களும் எடுபடாமலேயே போகும்.

நாமெல்லோரும் சேர்ந்து போராடித் தீர்த்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை தனிமனிதராகத் தீர்த்து வைத்திருக்கும் அவரைக் குறை சொல்லிக் கஷ்டப்படுத்துபவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

என்னுடைய பணக்காரன் படத்தில் அவருக்கு ஒரு வசனம் வைத்திருப்பேன். 'இனி வாழ்வோ சாவோ, எனக்குப் பிடிச்ச இந்த மண்லதான் அது நடக்கணும். அதனால ரிட்டர்ன் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு'. அது சினிமாவுக்காக வைத்த டயலாக் அல்ல.. ரஜினியின் மனதைப் படித்ததால் வைத்தது, என்றார்.

தென்னிந்திய பிலிம்சேம்பர் தலைவர் கேஆர்ஜி, கலைப்புலி தாணு, வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments: