Sunday, August 10, 2008

இதுவும் கடந்து போகட்டும்!


உள்ளூரில் ரஜினி எதிர்ப்பு குரைப்புகள் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட ரஜினிக்கு எதிராக ஒரு குரல் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்...

என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது... செலவில்லாமல் இலவச பப்ளிசிட்டி கிடைக்கிற அல்ப சந்தோஷம் அவர்களுக்கு.

ஒரு நாலாம்தர... ஏன் ஐந்தாம் தர பத்திரிகை அது. அதன் பெயரைக்கூட இங்கே எழுத விரும்பவில்லை. அவர்களுக்குக் கூட ரஜினி கிள்ளுக்கீரையாகிவிட்டார்.

இத்தனை லட்சம் ரசிகர்கள் இருந்து என்ன பயன்?
ஒருவராவது தங்கள் எதிர்ப்பை வலிமையாகக் காட்டினார்களா...

அட மற்ற காட்டுமிராண்டி கும்பல் மாதிரி பஸ்களைக் கொளுத்தி, நடைபாதையில் உறங்கிக் கொண்டிருக்கும் பிச்சக்காரர்களை கட்சித் தொண்டன் எனக் கூறி பெட்ரோலில் குளிப்பாட்டி அல்லது மாணவிகளை உயிரோடு கொளுத்தியெல்லாம் எதிர்ப்பு காட்ட வேண்டாம். குறைந்த பட்சம் காந்திய வழியில் ஒரு அடையாள எதிர்ப்பையாவது காட்டலாமே...

99 சதவிகித பத்திரிகைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் மட்டுமல்ல, நேர்மை என்றாலும் கூட என்னவென்றே தெரியாது.

விகடனையும் குமுதத்தையும் நக்கீரனையும் குறை சொல்லிப் பயனில்லை. அவர்கள் தங்கள் பத்திரிகைகளை முன்னுக்குக் கொண்டு வர உபயோகித்த வழிகள் அப்படி.

நடக்காத ஒரு விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா...
இதை அப்படியே நம்பிவிட்ட சில ரசிகர்களும் இந்த நேரம் பார்த்து மனச்சோர்வுடன் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு பத்திரிகை அதிபரும், பத்திரிகையாளர்களும் இனி ரஜினி நடித்து வெளிவரும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பங்கு கேட்டாலும் கேட்பார்கள் போலிருக்கிறது.
இத்தனை நாள் இவர்கள் பார்த்து, கவலை மறந்து சிரித்த ஒரு அருமையான கலைஞனை பொய் செய்திகளால் நிலைகுலைய வைக்க இவர்களுக்கு எப்படி மனசு வந்தது?

கடந்த 25 ஆண்டுகளாக விகடன், குமுதம் வருமானங்களில் கணிசமான பகுதி ரஜினிக்குத்தான் சொந்தம்! இவ்வளவு சொரணையுள்ள இந்த வீரத் தமிழர்கள் அதை திருப்பி வாசகர்களின் நலனுக்குச் செலவழித்துவிடலாமே...

நக்கீரன் என்ற ஒரு பத்திரிகை இன்று தாக்குப்பிடிக்க இருவர் முக்கியக் காரணம். ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி, அடுத்தவர் சூப்பர் வில்லன் வீரப்பன்.
இனி நல்லவர் ரஜினியை ஏமாற்றி சம்பாதிக்க முடியாது எனத் தெரிந்ததும், கொள்ளையன் வீரப்பன் பக்கம் தாவிய பத்திரிகை அது.

அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையும் அதன் அதிபரும் இன்று நியாய தர்மம் பேசுகிறார்கள். சாத்தான் வேதம் ஓதுவதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு!

இதுக்குத்தான் சார் யாரையுமே பார்க்க விரும்பறதில... ரசிகர்களைக் கூட இந்த பத்திரிகைகள் கெடுத்து வச்சிருக்கேன்னு ஒவ்வொருமுறையும் சார் வருத்தப்படுவார்.... அவரோட நல்ல மனசு வெளியாகிற தருணம் விரைவில் வரும் - இது சத்தியநாராயணா சில தினங்களுக்கு முன் என்னிடம் சொன்னது.

நிஜமாகட்டும்...


படங்கள்: http://onlysuperstar.blogspot.com

No comments: