Friday, September 5, 2008

இவை அமிலம் ஊற்றி அழிக்கப்பட வேண்டிய நச்சுக் காளான்கள்!


இன்று தமிழகத்தில் எரியும் பிரச்சினையாகப் பார்க்கப்படுவது திமுக, விஜயகாந்த், பாமகவினரின் அரசியல் அநாகரிகங்களோ அல்லது விலை உயர்வோ கிடையாது. சன்டிவியின் சுமங்கலி கேபிள் விஷனுக்கு மதுரையில் ஏற்பட்டுள்ள தலை போகிற பிரச்சினைதான்.

சன் நெட்வொர்க் சேனல்களை ஒழித்துக் கட்ட அழகிரி துவங்கியிருக்கும் ராயல் கேபிள் விஷனுக்கு ஆரம்பத்திலிருந்தே தனது சேனல்களைக் கொடுக்க மறுத்து வருகிறது சன் நெட்வொர்க். ட்ராய், கோர்ட் என பல முனைத் தாக்குதலர்களை நடத்தியும்கூட அழகிரியின் ஆர்சிவிக்கு இன்னும் சன் குழும சேனல்கள் கிடைத்தபடில்லை.

இன்னொரு பக்கம் அரசே கேபிள் கழகத்தைத் தொடங்கியுள்ளது. இதே கழகத்தை முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதா துவங்குவதாக அறிவித்தபோது, ஓடோடிப்போய் கவர்னரிடம் சொல்லித் தடுத்து நிறுத்திய அதே கருணாநிதி, யாருக்காக முன்பு இந்த திருப்பணியைச் செய்தாரோ அந்த சன்’னுக்கு எதிராகத் துவங்கியுள்ளார்.

காலம்தான் எத்தனை அற்புதமான விமர்சகன் பாருங்கள்...!

தான் சொன்னது நிறைவேறாவிட்டால் சாம தான பேத தண்டம் என சகலத்தையும் உபயோகித்துப் பார்ப்பதில் வல்லவர் அழகிரி. இப்போது தண்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார் போலும்.

சன்னும் தினகரனும் தினந்தோறும் குய்யோ முறையோ என கூப்பாடு போடுகின்றன. தினசரி யாராவது ஒரு தலைவரைப் பார்த்து மனு கொடுத்து அழகிரிக்கு எதிராக அறிக்கை விட வைக்கிறார்கள்.

அவர்களின் பித்தம் எந்தளவுக்குப் போய்விட்டது பாருங்கள்... இரு தினங்களுக்கு முன் சரத்குமார் (பெரிய கட்சித் தலைவராம்!), விஜய்காந்திடமெல்லாம் மனு கொடுத்து அழகிரியின் அராஜகத்தைத் தட்டிக் கேளுங்கள் என கெஞ்சினார்கள். இதை தலைப்புச் செய்தியாக வேறு போட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து ஒரு வாரமாக சன்னுக்கும் அழகிரிக்குமான மோதல்கள்தான் சிறப்புப் பார்வையாக, செய்தியாக ஒளிபரப்பாகின்றன.

தினகரன், தமிழ் முரசுகளைத் திறந்தால் போதும், பிரதாப முதலியார் சரித்திரத்தை மிஞ்சும் வகையில் சன் –ஆர்சிவி யுத்தக் கதைகள்தான் ஆக்கிரமித்துள்ளன.
செய்தி ஊடகம் என்ற அருமையான விஷயத்தை முறையாகப் பயன்படுத்த வக்கின்றி, இந்த சுயநலப் பெருச்சாளிகள் எப்படியெல்லாம் வக்கிரத்தை பிளேக் போல பரப்பி வருகின்றன பார்த்தீர்களா...

இந்திய பத்திரிகை கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது... இந்த மாதிரி கேவலத்தைத் தட்டிக் கேட்க வக்கில்லாத இந்த அமைப்புக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் எதற்கு? இதன் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி வேறு!

ஆனால் நம்ம மறத்(துப்போன) தமிழர்களுக்கு சூடு சுரணையே கிடையாது... ரெண்டு ரூபாய்க்குக் கொடுத்தால் எலிப் பாஷாணத்தேயே வாங்கி காப்பி போட்டுக் குடிப்பார்கள் போலும்...

சன் நென்வொர்க் எதற்காக மீடியா உலகை கையகப்படுத்தியது?

வெறும் வருமானத்துக்காக மட்டுமில்லை. இதுவும் ஒருவித ஆட்சிமுறைதான். இங்கே தேர்தல் கிடையாது. ஆனால் எப்போதும் கையில் அதிகாரமிருக்கும். உங்கள் உள்ளூரில் சும்மா 500 பிரதிகளை ஓட்டிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு சின்ன பத்திரிகை முதலாளியின் ஆட்டங்களையே உங்களால் தாங்க முடியாது.

அப்படி இருக்கையில் 10 லட்சம் பிரதிகளை விற்பதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையும் அதன் முதலாளிகளும் நினைத்தால், (அதுவும் நாளிதழ்) என்னென்ன அக்கிரமங்களை செய்தி என்ற பெயரில் அரங்கேற்ற முடியும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள். அதற்கு அவசியம் கூட இல்லை... தொடர்ந்து ஒரு வாரம் தினமலர், தினகரன் படித்துப் பாருங்கள்...

இந்த லட்சணத்தில் மும்பை, புனே வரை போய் தமிழ்நாட்டு மானத்தை கப்பலேற்றப் போகிறது இந்த மூன்றாம் தரப் பத்திரிகை!

ஒரு தீவிரவாதியைக் கூட மிகச் சுலபமாக காப்பாற்றிவிட முடியும், தினகரன், சன் டிவி போன்ற ஊடக ஆதரவு இருந்தால்...

தான் நல்லதென்று நம்பும் அல்லது தனக்கு ஆதாயம் தரும் எந்த ஒரு மோசமான விஷயத்தையும் பத்திரிகை எனும் ஆயுதம் மூலம் மக்கள் மீது திணிப்பது தினகரன், தினமலர் போன்ற பத்திரைகளுக்கு மிகச் சுலபம், அது அவர்களுக்குக் கைவந்த கலை. தினத்தந்தியும் இவர்களுக்கு சளைக்காத பத்திரிகைதான். உதாரணம் சிவந்தி – ராமச்சந்திர ஆதித்தன்களின் தொடர் மோதல்கள் செய்தியாக வெளிவரும் விதம்!

மக்கள் சிந்திக்க வேண்டும்... செய்தியைத் தெரிந்து கொள்ள எது நடுநிலைப் பத்திரிகை என்பது தெரிந்து அவற்றுக்கு மட்டுமே ஆதரவளிப்பதுதான் இது போன்ற நச்சுக் காளான்களை ஆசிட் ஊற்றி அடியோடு அழிக்க உதவும்.

சிகரெட் பிடிங்க.... தண்ணி அடிங்க... அது கூடத் தப்பில்ல... ஆனா தினகரன் படிப்பதும், சன் டிவி பார்ப்பதும் முன்பு சொன்ன இரண்டு தீய பழக்கங்களை விடவும் கொடிய பழக்கம் (அதற்காக தண்ணியடிக்கச் சொல்லவில்லை. இது ஒரு ஒப்புமைக்காக!).

5 comments:

சரவணகுமரன் said...

ரொம்ப பவர்புல்லா எழுதி இருக்கீங்க...

Vaanathin Keezhe... said...

நன்றி... உண்மை எப்போதும் பவர்புல்தான்!

Gokuldass said...

Excellent one .

Anonymous said...

சிறந்த பதிவு,
தமிழ்நாடும் தமிழனும் உருப்பட வேண்டுமென்றால் தமிழர்கள் தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களை புறக்கணிக்க வேண்டும்.

Vaanathin Keezhe... said...

நன்றி...