Friday, November 7, 2008

நாளையே கட்சி துவங்கினாலும் ரஜினிதான் முதல்வர்! – சோ

சோவுக்கு அறிமுகம் தேவையில்லை. ரஜினி - சோ நட்புக்கும் அப்படியே. நல்லதோ கெட்டதோ எப்போதும் தன் கணிப்பில் பிடிவாதமான உறுதியுடன் இருப்பவர் சோ.

அவர் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ரஜினி விஷயத்தில் அவர் கூறும் பல கருத்துக்கள், கணிப்புகள் ஏற்புடையவையே.

ரஜினி தன் ரசிகர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் கடந்த 1-ம் தேதி விறுவிறுவென பரவிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் அவரிடம் அதுகுறித்துக் கருத்துக் கேட்டது.

கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று சோ சொன்ன பதில்:

ரஜினி பற்றி எதுவாக இருந்தாலும் அவரை விட்டுவிடுகிறார்கள். என்னைத்தான் கேட்கிறார்கள். நான் என்ன மாத்தியா சொல்லிவிடப்போகிறேன்... எப்போதும் சொல்வதுதான். ரஜினி நாளைக்கே கட்சி ஆரம்பித்தால் கூட தமிழகத்தின் அடுத்த முதல்வர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை..., என்றார்.

ரசிகர்களுடனான ரஜினியின் சந்திப்பு மற்றும் அதில் அவர் சொன்ன அழுத்தமான பதில்கள் போன்றவை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பாஸிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோவிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.

அடுத்த நொடி பளிச் பளிச்சென்று வந்து விழுந்தன அவரிடமிருந்து கருத்துக்கள்.
ரஜினி வருவாரா வரமாட்டாரா என்ற ஆரூடத்துக்குள் போகாமல், சோ கூறியதை இங்கே அப்படியே தருகிறோம்:

ரஜினி எவ்வளவு தெளிவாக பதில் சொன்னாலும் என்னிடம் ஒரு முறை தெளிவுரை கேட்பதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.

என் கருத்தில் மாற்றமில்லை. ரஜினி அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்பதை நானோ நீங்களோ முடிவு செய்ய முடியாது. அவர்தான் அதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி கூறியது போல சந்தர்ப்பம் சூழல் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஒரு மாநிலமே அவர் பின்னால் நின்று அரசியலுக்கு வாருங்கள் என தூண்டிவிட்டாலும், இன்னும் அவர் காட்டுகிற நிதானம், இந்த ரசிகர் பட்டாளத்தை சரியாக வழிநடத்த வேண்டுமே என்ற அவரது பொறுப்புணர்வு அக்கறை... நாளை பொறுப்புக்கு வந்தால், அந்தக் கடமையை நிறைவேற்றப் போதுமான பயிற்சி தனக்கு வேண்டும் என்ற நினைப்பு... இவரை விட தகுதியான ஒருவர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கமாட்டார்.

நான் திரும்பவும் சொல்கிறேன்... இன்று நாட்டுக்குத் தேவை நாணயமான மனிதர்கள், நேர்மையாளர்கள். ரஜினிக்கு மட்டும்தான் இன்று அந்தத் தகுதி இருக்கிறது. எனவே ஆண்டவன் அவருக்கு சீக்கிரம் உத்தரவு கொடுக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அவருக்குள் பல திட்டங்கள் இருப்பது போலத்தான் தெரிகிறது. அவரை அவர் வழியில் விட்டுவிடுவதே சிறந்தது, என்றார்.

ரஜினியின் மனம் புரிந்தவர் அல்லவா...

http://www.envazhi.com

No comments: