Saturday, November 29, 2008

இதுவும் தீவிரவாதம்தான்!

மீடியாவில் இருந்து கொண்டே மீடியாவுக்கு எதிராக தொடர்ந்து பல கடும் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பதாக என்னிடம் உரிமையுடனும் கோபத்துடனும் சண்டைக்கு வரும் நண்பர்கள் நிறைய!

ஆனால், அவர்கள் எல்லாரும் ஒருமனதுடன் நேற்று மீடியாவை, குறிப்பாக எலக்ட்ரானிக் மீடியாவில் பெரும் பங்கு வகிக்கும் தொலைக்காட்சி செய்திக் குழுவின் அடாவடித்தனமான சில செயல்களைப் பார்த்தபிறகு, 'மீடியாவின் தீவிரவாதம்' எத்தகைய பயங்கரம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

சாம்பிள் ஒன்று:

கடந்த இரு தினங்களாக மும்பை நகரில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதல்களைப் பார்த்து நாடே பதற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தது. மும்பை மக்களின் கண்ணெதிரே தீவிரவாதிகளும் கமாண்டோ படையினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபராய் ஓட்டலிலிருந்து கையில் குண்டடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட ஒருவர் ஓடிவருகிறார். அடுத்த கணம்

அவரை என்ன செய்திருக்க வேண்டும், மனிதாபிமானம் பற்றி முழங்கும் இந்த மீடியா மேதாவிகள்...?

மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு ஓடியிருக்கலாம். அட, குறைந்தபட்சம் முதலுதவி செய்யச்சொல்லி யாரையாவது உதவிக்கு அழைத்து விட்டிருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

'ஹலோ... ஹலோ... இங்க வாங்க... இப்படிக் காட்டுங்க உங்க கையை...', 'மிஸ்டர்... ப்ளீஸ் ஷோ மீ யுவர் ஹான்ட்ஸ்...', 'இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க... இருங்க, அவசரப்பட்டு ஓடாதீங்க!' 'அங்க எத்தனை பேர் இருக்காங்க. என்ன செஞ்சாங்க... உங்களை எப்படி சுட்டாங்க... ஒரு பைட் (byte) எடுத்துக்கிறேன்...!'

'சரி... இதைச் சொல்லுங்க... கமாண்டோ படையால உங்களைக் காப்பாத்த முடிலையா... அவங்க வந்தும் பிரயோஜனமில்லேன்னு சொல்றீங்களா...?'

அந்த மனிதரோ வலியால் துடிக்கிறார், ரத்தம் இன்னமும் கொட்டியவண்ணம் உள்ளது. அவரைப் போக விடாமல் மறித்துக் கொண்டு நிற்கின்றன 20க்கும் மேற்பட்ட கேமராக்களும், அவற்றை இயக்கும் இதயமற்ற மனிதர்களும்!

சாம்பிள் இரண்டு:

ஓட்டலுக்குள் பிணைக் கைதியகளாய் மாட்டிக் கொண்ட நபர்களை விடுவிக்க கமாண்டோக்கள் போராடிக் கொண்டிருக்க, அதை லைவ் கவரஜ் எனும் பெயரில் ஒளிபரப்பிக் காசு பார்த்துக் கொண்டிருந்தன சேனல்கள் (அரை மணிக்கு குறைந்தது 20 விளம்பரங்கள் - டைம்ஸ் நவ், NDTV, IBNLive) இந்த லைவ் கவரேஜை யாராவது தீவிரவாதி டிவியில் பார்த்துக் கொண்டிருந்தால்... அல்லது இவர்களை வெளிநாட்டிலிருந்து இயக்கும் கும்பல் பார்த்துக் கொண்டிருந்தால், கமாண்டோக்களின் இத்தனை முயற்சியும் வீண் அல்லவா...!

இந்த யோசனை வந்ததும், முதலில் டிவி கேமராமேன்களுக்கு விஷயத்தைப் புரிவைத்து விலகிப் போகச் சொன்னது பாதுகாப்புப் படை. .

சொன்னவுடன் கேட்டுவிட்டால் பத்திரிகையாளன் என்ற நான்கு கொம்பு வைத்த, சட்டத்தை மீறிய சிறப்பு உரிமைகள் பெற்ற (உ.ம்: ஏம்பா நோ என்ட்ரில வந்தே? சார்.. பிரஸ். அர்ஜென்ட்) இந்த மாவீரர்களுக்கு இழுக்கு வந்துவிடும் அல்லவா..!

உடனே இதுகுறித்து அவர்கள் தத்தமது செய்தி ஆசிரியர்களுக்குத் தகவல் சொல்கிறார்கள்.
ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு இப்படி உத்தரவு போடுகிறார்: 'நீங்கள் போய் நமது கேமரா மட்டும் இன்னும் குளோசப்பாக நிகழ்ச்சியைக் கவர் பண்ண முடியுமா என தனியாகக் கேளுங்கள். முடிந்தால் அவரிடம் போனைத் தாருங்கள், நான் பேசுகிறேன். நமக்கு லைவ் கவரேஜ் முக்கியம்!'

இதற்குப் பெயர் என்ன? இவர்களை என்ன சொல்லித் திட்டுவது? எப்படித் திருத்துவது? கேட்டால் செய்தியை முந்தித் தருகிறார்களாம். மக்களுக்கு உண்மையை அறிவிப்பதில் அவ்வளவு ஆர்வமாம். அளவுக்கு அதிகமானால் எதுவுமே ஆபத்தில்தான் முடியும்!

மும்பை பயங்கரவாதத்தின் பின்னணியும், உண்மைகளும் உடனடியாக தொலைக்காட்சி பார்க்கும் இந்த வேடிக்கை மனிதர்களுக்குத் தெரிந்து இப்போது என்ன ஆகப் போகிறது? நாட்டின் இறையாண்மையைக் காக்க, உடலும் உயிரும் இந்தியத் திருநாட்டுக்கு என்று வீரவேசமாகக் கிளம்பி வருகிற கூட்டமா இது...!

'ஏம்பா... போரடிக்குது. எவ்வளவு நேரம்தான் இதையே காட்டிக்கிட்டிருப்பாங்க. கையாலாகாத கமாண்டோ படை... சேனல் மாத்துப்பா... கோலங்கள் அபி சட்டிப் பாத்திரம் கழுவுறாளா... கலைஞர்ல இன்னிககு ஆடறவ ரம்பாவா, கும்பாவா... பாரு!' என்று பொழுதுபோக்கில் தங்களைப் புதைத்துக் கொண்ட இந்தக் கூட்டத்துக்கு, செய்தியை முந்தித் தர இரக்கத்தையும் மனித நேயத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு செயல்படும் இந்த எந்திரங்களை மீடியா தீவிரவாதிகள் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது!

ஒரு குறிப்பு: எங்கும் எதிலும் சில அதிசயமான விதிவிலக்குகள் உண்டு. மீடியாவிலும் அப்படிச் சிலர் இருக்கலாம்... இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல!

ஒரு சல்யூட்: இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப், உன்னி கிருஷ்ணன், வீரர் கஜேந்திர சிங் தியாகங்களுக்கு வார்த்தைகளில் வெறும் புகழஞ்சலி செலுத்துவதை அவர்கள் ஆத்மா மன்னிக்காது (மோடி அளித்த நிவாரணத் தொகையைக் கூட மறுத்துவிட்டது கர்கரே குடும்பம்). அவர்கள் எந்த நோக்கத்துக்காக உயிர் தியாகம் செய்தார்களோ அது முழுமையடைய நம்முடைய பங்களிப்பைத் தர தயாராக வேண்டும்!

ஒரு தீர்வு:
இது வர்த்தக உலகம். மீடியா தன் வேலையைத் தாமதப்படுத்த முடியாது. செய்திகளை முந்தி தருவது தொழில் தர்மம். அதைக் குறை சொல்லலாமா என இன்னமும் வாதிடுபவர்களுக்கு... உண்மைதான். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தருவதில் ஒருவரை ஒருவர் மி்ஞ்சும் வகையில் செயல்படலாம். அது அக்மார்க் வியாபாரம்.

ஆனால், நாட்டின் பாதுகாப்பு கந்தலாகிவிட்ட அந்த சூழலில், இருக்கிற வீரர்களை வைத்துக் கொண்டு நிலைமையைச் சமாளிக்க ராணும் திணறிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பைத் தருவதே முதல் கடமை. செய்தி அப்புறம்தான்.

நிலைமையின் தீவிரம் கருதி விவரமான அறிக்கை மற்றும் காட்சிப் பதிவை சில மணிநேரங்கள் கழித்துத் தருகிறோம் என்று அறிவித்தால், பார்வையாளர்கள் தேடி வந்து கழுத்தை நெறித்துவிடுவார்களா என்ன...

நகரப் பகுதிகளில் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் யாரென்பதே தெரியாமல் வாழ்ந்து வரும் கலாச்சாரம் இன்று அதன் உச்சத்துக்குப் போய்விட்டது. இனியும் இது தொடர வேண்டாம்.

புதிதாக ஒரு கிராமத்துக்குள்இருவர் போய் பாருங்கள். ஏய் யாரப்பா நீங்க... உங்களை இதுக்கு முன்ன பார்த்ததே இல்லையே... என சுற்றி வட்டமிடாத குறையாக கேள்வி எழுப்புவார்கள். சந்தேகமிருந்தால் கட்டி வைத்து விடுவார்கள்!

ஆனால் நகரங்களில் புதிதாக ஒருவர் நுழைந்தால், முதலில் அவரை இருகரம் கூப்பி வரவேற்று வாடகைக்கு வீடும் பிடித்துக் கொடுத்து கமிஷன் பெறுவதற்கென்றே தெருவுக்குத் தெரு ஒரு கூட்டம் அலைகிறது. அவன் யார், எங்கிருந்து வருகிறான், என்ன கொண்டு வருகிறான் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறையே கிடையாது.

இந்த விஷயத்தில் போலீஸை விட அதிக அக்கறை நமக்குத்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் காக்கிச் சட்டை போடாத போலீஸ்தான்!


-வினோஜாஸன்

http://www.envazhi.com

No comments: