Thursday, November 27, 2008

விதியே... என்ன செய்ய நினைத்தாய் இந்த பாரதத்தை...!

நிலைமையை கவனிச்சிக்கிட்டே வாங்க... இன்னிக்கு நாடு சரியில்ல. இங்க, தமிழ்நாடு மட்டுமில்ல. இந்தியா முழுக்கவே நிலைமை இப்படித்தான் இருக்கு...”

தனது ரசிகர்களைச் சந்தித்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி பெரும் வேதனையோடும், ஒரு யோகியின் தீர்க்க தரிசனத்தோடும் சொன்னவை இவை.

மும்பை எத்தனையோ தொடர் குண்டு வெடிப்புகளை, ரத்தப் பலிகளைப் பார்த்துள்ளது. மீண்டுள்ளது. ஆனால் இன்று நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதலும் கொலைகளும் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த மாதிரியொரு மோசமான தாக்குதல் நடந்ததாக சரித்திரமில்லை.

இந்தச் சம்பவத்தில் இன்னும் கூட தீவிரவாதிகள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. துப்பாக்கிச் சத்தம் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மும்பை முழுக்க கரும்புகையும், கொழுந்துவிட்டெறியும் தீயும், குண்டு முழக்கங்களும்...

அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு இணையாக அல்லது அதைவிட மேலும் ஒரு படி கொடூரமான தாக்குதல் இது என்று அமெரிக்க இன்னாள் அதிபர் புஷ்ஷும், வருங்கால அதிபர் ஒபாமாவும் வர்ணிக்குமளவுக்கு நிலையை கைமீறிப் போய்விட்டது.

திறந்த இந்தியாவுக்குள் தீவிரவாதம் ஊடுருவுவது எத்தனை எளிது, அதைக் கட்டுப்படுத்துவது எத்தனைக் கஷ்டம் என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ள வலி மிகுந்த கொடூரம் இது.

இந்தியாவின் மற்ற நகரங்கள், சுற்றுலாப் பிரதேசங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இன்னும் எத்தனை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று புரியவில்லை.

தாஜ் மஹால், டிரைடண்ட், ஓபராய், நாரிமன் ஹவுஸ் ஆகிய 5 நட்சத்திர ஓட்டல்களிலும் ஒரு பக்கம் தீ கொழுந்து விட்டு எரிகிறது. மறுபுறம் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் எத்தனைபேர், எங்கிருந்து சுடுவார்கள், அவர்களின் பிடிக்குள் உள்ள வெளிநாட்டு பயணிகள் எத்தனைப் பேர் என்ற சரியான விவரங்கள் தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறது ராணுவம்.

டெக்கன் முஜாஹிதீன் என்ற பெயரில் சில தீவிரவாத இளைஞர்கள் பாகிஸ்தானிலிருந்து படகில் வந்து மும்பையில் நடத்தி வரும் இந்த கோரத் தாக்குதலில் 125 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 1000 பேர் காயம். இன்னும் 300 பேரின் நிலைமை தெரியவில்லை. இவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் பிடிக்குள் பிணைக் கைதிகளாய். இவர்களை விடுவிக்க, நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இஸ்லாமிய தீவிரவாதிகளும் விடுவிக்கப்பட வேண்டுமாம். பெரும் தொகை பணமாகத் தரவேண்டுமாம். இந்நேரம் பேரங்களும் துவங்கிவிட்டதாகக் கேள்வி!

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளாவது இதுதான் முதல் முறையா... இன்னும் கவனத்தோடு போலீசார் செயல்பட்டிருக்க வேண்டும் என்ற வழக்கமான கேள்வியை இப்போதும் உதாசீனப்படுத்த முடியாது. காரணம் நமது பாதுகாப்பு வளையத்தில் உள்ள ஓட்டைகள்.

அதேபோல உளவுத்துறையின் அதீத மெத்தனத்தையும், ‘பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்..’ என்ற கேள்வியோடு விட்டுவிட முடியாது.

தேசப் பாதுகாப்பின் இரு கண்களாகத் திகழும் இந்த இரு பிரிவினருமே இன்று செயலிழந்து நிற்கக் காரணம், லஞ்சம் என்ற அழிக்கவே முடியாத வைரஸ் இவர்களின் ஈரல், இதயம், மூளை என எல்லா பகுதியையுமே தின்று கொண்டிருப்பதுதான்.

தேசத்துக்காக செய்ய வேண்டிய இந்த பொறுப்பான பொது நலப் பணியில் இருக்கும் இவர்களிடம் கவனக் குறைவும், சுயநலமும் சேர்ந்து கொண்டதாலேயே இன்று இந்த தீவிரவாதப் புலியின் தும்பை விட்டு வாலைப் பிடித்து கடிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கராச்சியிலிருந்து படகு மூலம் 25 பேர், ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இந்தியாவின் இதயப் பகுதியில் ஊடுருவுகிறார்கள் என்றால், நாட்டின் பாதுகாப்பில் விழுந்துள்ள ஓட்டை எத்தகையது எனப் புரிகிறதல்லவா!

தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வருகிறது என்று பார்த்து அதற்கேற்ப அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் மத்திய மாநில அரசுகளும் இதற்கு பொறுப்பானவர்களே.

மாலேகானில் இந்துத் தீவிரவாதம் என்றால் அதுபற்றிப் பேசக் கூடாது என பாஜகவும், தொடர் குண்டு வெடிப்புகளில் முஸ்லிம் தீவிரவாதம் என்றால் அதுபற்றி பேசாமல் அமைதி காக்குமென்று காங்கிரஸ் ‘பேரியக்கங்களும்’ இன்னும் எத்தனை காலத்துக்கு வோட்டுப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? இதிலே மனித உரிமை பேசிக்கொண்டு கம்யூனிஸ்டுகள் வேறு காலை வார காத்திருப்பார்கள்.

யார் செய்தாலும் தீவிரவாதமே... மதங்களைத் தாண்டி அதை அழித்தொழிக்க வேண்டியது ராணுவம்-பாதுகாப்புப் படையின் பணி. அதில் குறுக்கே வரும் யாரும் இந்தத் தீவிரவாதிகளுக்கு இணையான குற்றவாளிகளே...

வெளிநாடுகளிலும் தீவிரவாதம் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. அமெரிக்காவில் இன்னொரு 9/11 அரங்கேறாமல் அவர்களால் பார்த்துக் கொள்ள முடிகிறதென்றால், உலகின் முதல்நிலை ஜனநாயகம், முதல் நிலை ராணுவம் என்று பீற்றிக் கொள்கிற நாம் தொடர்ந்து கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோமே... ஏன்?

எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற நமது மனப்பான்மைதான். கண்ணெதிரே கொலை வெறியோடு அடித்துக் கொள்ளும் சட்டக் கல்லூரி மாணவர்களையும், அவர்களை வேடிக்கை பார்க்கிற போலீசையும், மோதவிட்டு வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வரையும், இதற்குப் பின்னணியில் இருந்த முக்கியப் புள்ளிகளையும் எப்படி வேடிக்கைப் பார்த்தோமோ, அதே போலத்தான் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்டு கண்ணெதிரே உயிர் விட்டுக் கொண்டிருக்கிற அப்பாவி மக்களையும் பார்க்கிறோம். அப்படியே பழகிவிட்டோம்.

நமக்கும் சேர்த்து உணர்ச்சிவசப்பட்டுக் கொள்கின்றன மீடியாக்கள். அடுத்த நாளே, இந்த துயரத்தை மறக்கத் தேவையான கேளிக்கைகளையும் படுகைகையறைக்கே வந்து கொட்டுகின்றன.

நாட்டின் முக்கிய நகரங்களை சொல்லிச் சொல்லி இந்த கொடியவர்கள் தாக்குவதும், அதை சேனல்கள் சுழன்று பம்பரமாகப் படம்பிடித்து காட்டிக் கொண்டிருக்கும் அவலமும் இனியொருமுறை தொடர்ந்தாலும், இந்த அமைப்பை மாற்றியாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதென்று அர்த்தம்!

அதைவிட முக்கியம், இந்த மக்கள் தங்கள் மரத்துப் போன இதயங்களை கொஞ்சமாவது சொரணையுள்ள மனித இதயங்களாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம்!

-ஷங்கர்
http://www.envazhi.com

No comments: