Monday, December 1, 2008

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்

75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான் என்கிறார் கார்ட்டூனிஸ்ட் மதன்.

மதனின் ஒவ்வொரு கோடுகளுக்கும் தனி அர்த்தம் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் உண்டு. ரஜினி என்ற மாபெரும் கலைருக்குள் உள்ள கலை, அரசியல், மனிதாபிமானம் பற்றி, இன்றைய பத்திரிகையாளர்களில் அதிகம் தெரிந்தவர் மதன்.

அது மட்டுமல்ல, பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் தலைக்குப் பின்னால் ஏதோ ஒரு ஒளிவட்டம் சுழல்வதாக தலைக் கனத்துடன் பேசித் திரியும் இன்றைய சூழலில் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர் மதன். ஒரு நல்ல ரசிகர், நல்ல எழுத்தாளரால்தான் இப்படி மனம் திறந்து பாராட்ட முடியும் என்பதால் இதைக் குறிப்பிடுகிறேன். (அவரது முகாம், அவர் வளர்ந்த பின்னணி குறித்தெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.)

ரஜினி பேரக் கேட்டாலே... எனும் தலைப்பில் தமிழில் டாக்டர் காயத்ரி எழுதிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் நேற்று மாலை சவேரா ஓட்டலில் வெளியிடப்பட்டது.

கவிஞரும் திமுக எம்பியுமான கனிமொழி கருணாநிதி முதல் பிரதியை வெளியிட, எழுத்தாளரும் கார்ட்டூனிஸ்டுமான மதன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பம்சம் மதன் மற்றும் எஸ்பி முத்துராமனின் சிறப்பான பேச்சுதான். ரஜினியைப் பற்றி எந்தவித அலங்காரங்களும் இல்லாத அவர்கள் பேச்சு உண்மையிலேயே நிறைவாய் இருந்தது. மற்றபடி இந்த விழாவில் சில நெருடல்களும் உண்டு. அதை பின்னர் பார்க்கலாம்!

மதன் பேச்சிலிருந்து...
நடிகரின் வாழ்க்கை வரலாறு என்றதுமே சிலர் ஆஹா என்பார்கள். இன்னும் சிலர் ஓ என்ற சின்ன பார்வையுடன் நகர்ந்து விடுவார்கள். எழுதுபவருக்குப் புகழ் கிடைத்தாலும், அவர் எழுத்துக்கு பெரும்பாலும் அங்கீகாரம் கிடைக்காது.

இதற்குக் காரணம் ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்கள். அதாவது ரெண்டுவித சிக்கல்கள் இருக்கு. பெரும்பாலும் ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை நிருபர் தனி வேலையாக அதை எடுத்துக் கொண்டு எழுதுவார். அதில் பெரும்பாலும் உண்மைகள் விடுபட்டு, வெறும் புகழ்ச்சிதான் மேலோங்கியிருக்கும். ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அவரது தொண்டர்கள் யாரேனும் எழுதினாலும் இந்த நிலைதான்.

இன்னொன்று பிரபல எழுத்தாளர்கள் எழுத முன்வருவதில்லை. அப்படியே எழுதினாலும் அதில் விமர்சனம் நிறைந்திருக்கும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கில் எழுதப்படும் வாழ்க்கை வரலாறுகள்தான், நல்ல பதிவுகளாக அமையும்.

இந்தப் புத்தகம் அப்படிப்பட்டதுதான். நன்றாக எழுதியிருக்கிறார் காயத்ரி. ரஜினியின் வயதுக்கேற்ப அந்தஸ்து அதில் தரப்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு அவரது சிறுவயது பருவ நிகழ்வுகளில் சிறுவன் ரஜினிதான். அதில் சிறப்பு மரியாதை கிடையாது. சூப்பர் ஸ்டாராக வந்த பிறகு அதற்குரிய மரியாதையோடு விளித்து எழுதியிருப்பது இந்த நூலுக்கு தனி நம்பகத் தன்மையைத் தருகிறது.

ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு. ஆனால் அதைப் பற்றி பேசும் மேடை இதுவல்ல.

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அதையும் தாண்டிய பல பரிமாணங்கள் ரஜினி அவர்களுக்கு உண்டு.

வெளிநாடுகளிலும் ஒரு நடிகரைப் பற்றி பல புத்தகங்கள் வருகி்ன்றன. ஆனால் இங்கே அப்படி இல்லை. ரஜினியைப் பற்றி எப்போதோ இந்த மாதிரி புத்தகங்கள் வந்திருக்க வேண்டும். டாக்டர் காயத்ரி போன்றவர்கள் ரஜினியைப் பற்றி இன்னும் பல கோணங்களில் புத்தகங்கள் எழுதலாம். ஒரு ஞாயிற்றுக் கிழமையை இதற்காக ஒதுக்கி ரஜினியுடன் சில மணிநேரங்கள் உரையாடி, அதையே புத்தகமாகவும் கொண்டுவரலாம்.

அப்படிச் செய்யும்போது, ரஜினியைப் பற்றியும், அவரது எண்ணங்கள் பற்றியும், மக்களின் ரசனை குறித்தும் மக்களுக்குத் தெரியவரும், என்றார்.

- வினோஜாஸன்
http://www.envazhi.com

No comments: