Saturday, December 20, 2008

எந்திரன்... சன்... சில பார்வைகள்!

ந்திரனை சன் குழுமம் வாங்கிவிட்டது!

இந்தச் செய்திக்கு எழுந்துள்ள எதிர்வினைகளைப் பாருங்கள்...

ரஜினி சன் நிறுவனத்திடம் பணிந்துவிட்டார்.... சன் குழுமமும் அதன் பத்திரிகைகளும் இனி ரஜினிக்கு ஜால்ரா அடித்து சம்பாதிக்கப் போகின்றன... சன் குழுமத்தைத் திட்டிய நீங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்குமே இனி அர்த்தமில்லை.

காரணம் இந்த ஒப்பந்தத்தை முன்நின்று முடித்துக் கொடுத்துள்ளவர் ரஜினி. அவரே இதைப் பற்றிக் கவலைப்படாத போது, வேறு யார் அதுபற்றி விசனப்படுவதும் அபத்தம்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒரு முக்கிய பிரமுகரின் விளக்கத்தைத் தரவிருக்கிறேன், அவர் அனுமதி கிடைத்தபிறகு.

ரஜினிக்கு தெரியாததையா ரசிகர்கள், ஆதரவாளர்கள் எனும் பெயரில் நீங்கள் சொல்லப் போகிறீர்கள்!

ரசிகர்கள் வருத்தப்படுவதற்கு இதில் ஒன்றுமே இல்லை. மேலே நாம் குறிப்பிட்ட இந்தக் கேள்விகள் ரஜினிக்குள் எழுந்திருக்காதா... அல்லது இவற்றைப் பற்றி யோசிக்காமலா ரஜினி கலாநிதி மாறன் வீட்டுக்குப் போயிருப்பார்!

நாம் ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயம் பற்றி தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அவரது மிகச் சிறந்த நடிப்பை, ஸ்டைலை, நகைச்சுவையை, அதிர வைக்கும் ஸ்டன்ட் காட்சிகளைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் மட்டும்தான் ஒரு நல்ல ரசிகனுக்கு இருக்க வேண்டும்.

இதைத்தான் ரஜினியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் எல்லை தாண்டாமல், ரஜினி என்ற நடிகருக்கான ரசிகர்களாக இருங்கள் என்பதுதான் அவர் கொள்கை. அவர் அரசியலுக்கு வெளிப்படையாக வரும்போது தொண்டர்களாக மாறிக் கொள்ளுங்கள்...

அதைவிட்டுவிட்டு, அவர் எப்படி இதில் கையெழுத்திட்டார்... அப்போது யார் யாரெல்லாம் கூட இருந்தார்கள். ரஜினிக்கு இதில் எவ்வளவு பங்கு... அது மொத்தத்துக்கும் வரி கட்டினாரா... இதில் அவர் குடும்பத்தாருக்கு திருப்தியா...கலாநிதி மாறனுடன் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கிறாரே அது ஏன்?

-இப்படியெல்லாம் தோண்டித் துருவிக் கொண்டிருப்பது ஒரு ரசிகனின் வேலையல்ல... அந்த உரிமையை அவர் மீடியா உள்பட யாருக்கும் தந்துவிடவில்லை. இவை ரசிகன் என்ற போர்வையில் சிலர் செய்யும் அதிகப்பிரசங்கித்தனங்கள்.

அடுத்து சன் குழுமம் குசேலனுக்கு செய்ததை மறந்துவிட்டாரா ரஜினி?

ஒருமுறை நடிகர் அஜீத் இப்படிக் குறிப்பிட்டார்:

“ரஜினி சார் மாதிரி எதையும் தொலைநோக்குப் பார்வையோட, ரசிகர்களை மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு முடிவு எடுக்கும் பக்குவம் நமக்கில்லை.

அவர் என்னிடம் சில நகைச்சுவை நடிகர்களைக் குறிப்பிட்டு, அவங்கெல்லாம் எனக்கு எதிரா என்னென்ன பேசினாங்கன்னு எனக்கும் தெரியும். ஆனால் நமக்கு ரசிகர்கள்தான் முக்கியம். அவங்க ஏமாந்துடக் கூடாது. இவர் நம்மாகூட சேர்ந்து காமெடி பண்ணியிருந்தா நல்லாருக்குமே என பேச வச்சிடக் கூடாது. அதுக்காகத்தான், நானே சிலரை அழைத்து என் படத்தில் நடிக்க வச்சேன். நீங்களும் இதை மனசுல வச்சிக்கிட்டு, எந்த காமெடியன் கூடவும் பிரச்சினை வச்சிக்காதீங்க... எல்லார் கூடவும் சேர்ந்து நடிங்க...” என்றார்.

இதுதான் ரஜினியின் மனது. எல்லாருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றையே அவர் செய்கிறார்.

தனது லட்சியப் படமான பாபாவுக்கு எதிராக ராமதாஸ் செய்ததையே மறந்து, மீண்டும் ராமதாஸ் மற்றும் அவர் மகனிடம் நட்பு பாராட்டியவர் ரஜினி. யோசித்துப் பாருங்கள்... ராமதாஸ் பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் பாபா எத்தகைய படமாக திகழ்ந்திருக்கும் என்பதை!

அடுத்து குசேலன் விவகாரம்... அந்த விவகாரத்தில் சன் நடந்து கொண்டது தவறு என்று எழுதிய நாம், என்ன விரும்பினோம்? சன் குழுமம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதானே... இதோ இப்போது அவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டே தீர வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ரஜினியின் புகழைப் பரப்பும் வலுவான மீடியாவாக சன், தினகரன் மாறும்போது அதில் ரசிகர்கள் கஷ்டப்பட என்ன இருக்கிறது...

இன்னொன்று இந்த முடிவை யாரோ ஒருவர் வந்து திணிக்கவில்லை... இது ரஜினி எடுத்த முடிவு... அந்தப் படத்துக்கு எது நல்லதோ அதை ரஜினி செய்திருக்கிறார்.

சன்-தினகரன் குழுமத்தை அவரே ஏற்றுக் கொண்ட பின், மேற்கொண்டு அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியே இருந்தாலும், இந்த நேரத்தில் தன் சார்பாக பதில் சொல்லுங்கள் என்று ரஜினி யாருக்கும் உத்தரவிடவில்லை!

ஒரு பிரச்சினையின்போது பொதுவாக நியாயத்தைச் சொல்வது இயல்புதான். குசேலன் பிரச்சினையில் மீடியா செய்த தவறை அப்படித்தான் நாம் சுட்டிக் காட்டினோம்.
ஆனால் ஒரு வர்த்தகத்தின் இடையில் புகுந்து அதே நியாயத்தைப் பேச முடியாது.
இந்தியாவின் மிகச் சிறந்த படமாக, உலகத் தரத்தில் தயாராகும் எந்திரன் சிறப்பாக வரவேண்டும் என அவர் விரும்புகிறார்.

சிவாஜிக்கு கெட்ட பெயர் வந்த போதும் கைகட்டி நின்ற ஏவிஎம், குசேலனைக் கூறு போட்ட போது வாயில் ப்ளாஸ்டரோடு திரிந்த கவிதாலயம்... இவர்களோடு இப்போதும் ரஜினி நட்பு பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார். சொல்லமுடியாது, மீ்ண்டும் கூட நடித்துக் கொடுப்பார். இவர்கள் மாதிரி சன் இருக்காது என்று ஆற்றுதல் பட்டுக் கொள்ளுங்கள்.

படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கிய அவர்கள் நிச்சயம் கல்லா கட்டத்தான் செய்வார்கள். அதற்குத்தானே இவ்வளவு முதலீடு... இதற்கு முன் பாட்ஷா, சந்திரமுகி பரடத்தைப் போட்டு கல்லா கட்டும்போது இருந்த உரிமையை விட இப்போது அவர்களுக்கு அதிக உரிமை வந்திருக்கிறது.

எந்திரன் குறித்து சன்-தினகரன் இனி வெளியிடுவது முற்றிலும் அதிகாரப்பூர்வ செய்தியாகவே இருக்கும். எனவே இப்போதைக்கு ரஜினி ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஆதாரம் சன் குழும மீடியாதான்.

இந்தப் படத்தை ரஜினியே தயாரிதிருக்கலாமே... அவரிடம் இல்லாத பணமா? என்றும் சிலர் கேட்கிறார்கள்.

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஒரு கட்டுரையில் இப்படி எழுதியிருப்பார்: “எழுதறவன், எந்தக் கவலையும் இல்லாம எழுதிக்கிட்டே இருக்கணும். கரன்சி நோட்டை கையில எடுத்து கணக்கு வழக்குல இறங்கினா அப்புறம் எழுத்துல உள்ள சுவாரஸ்யம் போய்டும்... அதுக்கு நாட்டுல இருக்கு நிறைய உதாரணங்கள்....”

இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நிஜ காரணம் அவரே சொன்னாலன்றி யாருக்கும் தெரியாது. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்... படம் வரும் வரை அதுகுறித்த செய்திகளை என்ஜாய் பண்ணுங்க என்று அவரே நினைக்கும்போது, நாம் எதற்கு அதுபற்றி விவாதிக்க வேண்டும்!

ரஜினி ஆதரவு தளங்களின் நிலை என்ன?

இதில் பெரிய நிலைப்பாடு எடுக்கும் அவசியம் எதுவுமில்லை. சன் குழுமம் எந்திரன் தயாரிப்பாளர். எனவே ரஜினி குறித்த அவர்கள் பார்வை அடியோடு மாறியிருக்கிறது. நேரம் வரும்போது மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுக்கும். இப்போதைக்கு ரஜினி பற்றி மோசமாக சித்தரிக்க மாட்டார்கள்.

ஆனால் அவர்களின் அரசியல் பார்வை, பிற செய்திகளை வெளியிடும் பாங்கு மாறாது அல்லவா... எனவே அவர்கள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள் நம் தளத்தில் தொடரும்.

-வினோஜாசன்

No comments: