Monday, March 2, 2009

சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டுப் பெற்ற வெண்ணிலா கபடி குழு புது ஹீரோ!


ஒருவரைப் பாராட்டுவது என்று முடிவு செய்துவிட்டால், வஞ்சனையில்லாமல் பாராட்டி மகிழ்வார் ரஜினி. ஆனால் யாரைப் பாராட்ட வேண்டும், எதற்காகப் பாராட்ட வேண்டும் என்பதில் மிகத் தெளிவாகவே இருப்பார்!

இந்த புத்தாண்டு பிறந்ததிலிருந்து வெளியான படங்களில் அவர் பார்த்து பாராட்டிய படங்கள் அமோகமாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன.

அதாவது ரஜினி பாராட்டியதால்தான் அவை ஓடுகின்றன என்று நாம் சொல்ல வரவில்லை. ரஜினியின் பாராட்டுக்கள் அந்த நல்ல படங்களை இன்னும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளன.

நான் கடவுள், பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த அந்தப் படத்தின் வர்த்தகத்துக்கு ரஜினியின் பாராட்டு எந்த அளவு உதவியது என்பதை, படத்தின் 10வது போஸ்டர்களைப் பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

முன்பே ரஜினி பார்த்துப் பாராட்டிய படம் வெண்ணிலா கபடிக் குழு. இந்தப் புத்தாண்டுக்குப் பிறகு வெளியான படங்களில் நின்று ஓடிக் கொண்டிருப்பவை இவை இரண்டு படங்கள்தான்.

நேற்று அந்தப் படத்தின் 30-வது நாளுக்கு, மாநிலம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார் தங்களுடன் நிற்கும் ஸ்டில்லை பெரிதாக வைத்து.

நான் கடவுள், வெண்ணிலா கபடிக் குழு இரண்டுமே அருமையான படங்கள். அந்த நல்ல படங்கள் இன்னும் அதிக மக்களைச் சென்று சேர ரஜினியின் இந்த பாராட்டுரைகள் உதவியிருக்கின்றன. திரையுலகில் முதல் நிலை வகிக்கும் ஒரு கலைஞர், தனக்கடுத்த தலைமுறை நடிகர்கள், கலைஞர்கள் சிறப்பாக வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், யாருடைய வற்புறுத்தலுமின்றி ரஜினி செய்து வரும் நல்ல விஷயங்கள் இவை. அடுத்தவரை மனசார பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டுமல்லவா!(ப்ரிவியூ ஷோவில் உதட்டில் புன்னகையும், மனதுக்குள் நக்கலுமாக கைகுலுக்கிவிட்டுப் போவார்களே... அந்த உலகில் இப்படியொரு பாராட்டு அரிதல்லவா!)

இன்னொன்று ரஜினி என்பவர் தனி மனிதரல்ல... அவரை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்கள், பின்பற்றும் தீவிர ரசிகர்களைக் கொண்டவர். அறிவுஜீவிகள் இதை ஒரு பிம்பம் என்று சொல்லி தன் வக்கிரத்தைத் திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உண்மை எல்லாருக்கும் என்னவென்று எல்லாருக்குமே தெரியும்தானே!

தான் ஒரு படத்துக்குத் தரும் பாராட்டும் நற்சான்றும் தன்னைச் சார்ந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித்தினரையாவது அந்தப் படம் ஓடும் திரையரங்குகளுக்குக் கொண்டு செல்லும் என்பது அவருக்கும் தெரியும். அதுதான் ரஜினியின் பாராட்டினால் ஒரு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கிடைக்கிற நேரடி பலன்!

அதேநேரம் சரியான ஒன்றை மட்டுமே அவர் எப்போதும் முன்னிறுத்துவதையும் கவனிக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன் வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்து பாராட்டியதோடு நில்லாமல், அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்த புதுமுகம் விஷ்ணுவையும் மண்டபத்துக்கு வரவழைத்துப் பாராட்டி இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

ஒரு தேசிய விருதுக்குச் சமமான பெருமையை, மகிழ்ச்சியை இந்த சந்திப்பு தந்ததாக சிலிர்க்கிறார் புதுமுகம் விஷ்ணு, அந்த நிகழ்வை நினைத்து.

'உண்மைதாங்க... நானெல்லாம் தலைவர் படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பாக்குற ஆளுங்க. அவரை நேர்ல பார்ப்பேன், இவ்வளவு பெரிய பாராட்டை வாங்குவேன்னு சத்தியமா கனவு கூட காணலை. எனக்கு தலைவர் பாராட்டே தேசிய விருது மாதிரிதான். என்னையெல்லாம் கூப்பிட்டுப் பாராட்டறார்னா அவருக்கு எவ்வளவு பெரிய மனசு...', என்கிறார் விஷ்ணு.

மேலும் கூறுகையில், 'முதல்படமே நல்லா பண்ணியிருக்கீங்க... இனி நிறைய வாய்ப்புகள் வரும், வர்ற எல்லாத்தையும் ஒப்புக்காம, நல்ல குழு, கதை இருக்கிற படமா பாத்து கமிட் ஆகுங்க, என்று ரஜினி சார் சொன்னதை வாழ்க்கையின் மந்திரமாக கடைப்பிடிப்பேன்', என்கிறார்.

ரஜினியின் சிறப்பு இதுதான். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் அனுபவத்திலிருந்தே பிறந்தவை என்பதால்தான், எளிமையாக இருந்தாலும் அவற்றுக்கு வலிமையும் அதிகம்!

-ரசிகன்

No comments: